மதுரை: சுவாசக்கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (ஆக.13) காலமானார். அவருக்கு வயது 77.
தமிழ்நாட்டின் மிகப் பழமை வாய்ந்த சைவ சமய மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இந்த மடம் சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால், 1500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இம்மடத்தின் 292ஆவது ஆதீன கர்த்தராக இருந்தவர் அருணகிரிநாதர். கடந்த 1980ஆம் மதுரை ஆதீனகர்த்தராக பொறுப்பேற்றுக் கொண்ட அருணகிரிநாதர், 41 ஆண்டுகள் ஆதினகர்த்தராக இருந்துள்ளார்.
தஞ்சையில் உள்ள கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில், திருவாரூரில் உள்ள கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் ஆகியவை மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமானவைகளாகும். மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக பல்வேறு நிலங்கள் தமிழ்நாடு, இலங்கையிலும் தற்போதும் உள்ளன.
ஆரம்பத்திலிருந்தே பல நல்ல விசயங்களை செய்து வந்த மதுரை ஆதீனம், பல்வேறு கோயில்களில் இவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பல பள்ளி,கல்லூரி, கோயில்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றியுள்ளார் அருணகிரிநாதர். சைவத்தையும் தமிழையும் தன் கண்ணெக் கொண்டு போற்றி வந்த ஆதீனம் ஒரு பத்திரிக்கையாளரும் கூட.
மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், சமூகம், அரசியல் சார்ந்த பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவராவார். ஈழத்தமிழருக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று அவர்களுக்காக குரல் கொடுத்தவர். முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டிற்கான உரிமை கோரி நடைபெற்ற போராட்டங்களிலும் பங்கேற்றவர். அனைத்து அரசியல் தலைவர்களிடமும் நட்புரிமையுடன் பழகக்கூடியவர். அருணகிரிநாதர் மீது அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தபோதும் கூட மக்கள் மத்தியில் இவருக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு குறையவே இல்லை.