மதுரை மாவட்டம் கவட்டையம்பட்டியில் இளந்தகரை அய்யனார் கோயில் சொந்தமான 10.88 ஏக்கர் பொது நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ததாக தர்மலிங்கம், கருப்பணன், சந்திரன் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மேலூர் நீதிமன்றம், சிவில் பிரச்சனை சார்ந்த வழக்கு எனக்கூறி அனைவரையும் விடுவித்தது. இதை எதிர்த்த வழக்கில் மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், "ரூ.1.5 கோடி மதிப்புள்ள கோயில் பொது நிலம் ரூ.1.57 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை கீழமை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இயற்கை வளம் வருங்கால தலைமுறையின் சொத்தாகும். இதை அழிப்பதை ஏற்க முடியாது. இயற்கை வளத்தை சுரண்டுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும் இந்த வழக்கில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இடத்தை போலியான ஆவணங்கள் தயார் செய்து தனி நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, நேர்மையற்ற முறையில் நிலம் மாற்றப்பட்டுள்ளது. முகாந்திரம் உள்ள குற்ற புகார்களை யார் வேண்டுமானாலும் அளிக்கலாம். பொதுச் சொத்துக்கள் தனியாருக்கு மாற்றப்படுவதை கண்டு நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வழக்கை முறையாக விசாரித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது காவல்துறையின்ர கடமை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேர் மீதும் விசாரணை நீதிமன்றத்தில் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:Neocov வைரஸ் பற்றி தவறாக செய்திகளை பரப்ப வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்