கன்னியாகுமரி மாவட்ட சிஐடியு மாவட்ட குழுவுடன் இணைக்கப்பட்ட குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கத்தின் செயலர் அஜித்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கன்னியாகுமரி மாவட்டம் 1956இல் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த 491 திருக்கோயில்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது .
இந்தக் கோயில்களில் காவலர், இரவு காவலர், சிறப்புக் காவலர், நாதஸ்வரம், தவில் வித்வான்கள் உள்ளிட்ட பணிகளை பார்ப்பதற்காக பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் நீண்டகாலமாக, தினக்கூலி பணியாளர்களாக இருந்தனர். அதன் பின், காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது அவர்கள் பெற்றுவரும் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. இவர்களுக்கு 2001ஆம் ஆண்டுவரை குறைந்தபட்சமாக நூறு ரூபாயும், அதிகபட்சமாக 300 ரூபாய் ஊதியமும் வழங்கப்பட்டது. பல்வேறு தொடர் முயற்சிகளுக்கு பிறகு, 2010 முதல் குறைந்தபட்சம் ரூ.700 அதிகபட்சம் ரூ. 3,000 ஊதியமாக மாதந்தோறும் பெற்றுவருகின்றனர். இந்த, ஊதியத்தை வைத்து இவர்களால் வாழ்வை மேற்கொள்ள முடியாது.