மதுரை: கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் எம். ஜெயா. இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்துள்ள மனுவில், “என் மகன் முத்து கார்த்திக்கை மதுரை எஸ்.எஸ். காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ், சார்பு ஆய்வாளர் சதீஷ், காவலர்கள் ரதி, சில காவலர்கள் ஒரு திருட்டு வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்
அழைத்துச் சென்ற என் மகனை, காவல் நிலையத்தில் மூன்று நாள்களாகச் சட்டவிரோதமாக அடைத்துவைத்துச் சித்திரவதை செய்தனர். பின்னர், பொய் வழக்கில் கைதுசெய்தனர். மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட என் மகன் முத்து கார்த்திக் உயிரிழந்தார்.
இதனையடுத்து, என் மகன் மரணமடைந்தது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து, காவல் ஆய்வாளர் அலெக்ஸ் உள்பட மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தனர். இருப்பினும் அம்மூன்று பேர் மீது இதுவரை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.