மதுரை: அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "முல்லைப் பெரியாறு அணை திறப்பு குறித்து உண்மையான நிலவரத்தை தமிழ்நாடு அரசு சொல்ல வேண்டும். மாநில நீர் வளத்துறை அமைச்சர் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
கேரளா அரசு 136 அடி மட்டுமே நீரை தேக்கி வைப்போம் எனக் கூறிய போது, அதற்கு எதிராக ஜெயலலிதா ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 142 அடியாக உயர்த்துவேன் என ஜெயலலிதா சபதம் செய்து அதனை செய்தும் காட்டினார்.
ஆனால், திமுக ஆட்சியில் கேரளாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த ஜெயலலிதாவுக்கு 19 மிரட்டல் கடிதங்கள் வந்தன. அதனையும் மீறி மதுரை மக்களுக்காக உயிர் போனாலும் போகட்டும் என மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அதிமுக ஆட்சியில் இரண்டு முறை 142 அடி உயர்த்தி காட்டினோம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தலைமையோடு கலந்துபேசி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கேரளாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்றார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜு பேட்டி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டுவது குறித்த கேள்விக்கு, திமுக எந்த வாக்குறுதி கொடுத்தாலும் அதை நிறைவேற்றும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. பொய்யான வாக்குறுதியை தான் கொடுப்பார்கள். மக்களுக்கு திமுக இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர் நிதி கூட எங்களுக்கு இன்னும் ஒதுக்கீடு செய்யவில்லை. தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைசெய்ய நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாடு என பெயர் சூட்டியது தான் அண்ணா. தமிழ்நாடு வரைபடம் கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி . எந்த அரசு மாறினாலும் பெயர் சூட்டியதை எடுத்துக்கொள்ளாமல், வரைபடம் உருவானதை வைத்தே தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக்குகள் நிறுத்தப்பட்டு விட்டன. மக்கள் நலன் கருதி அம்மா மினி கிளினிக்குகளை தொடர்ந்து நடத்த வேண்டும். அதனால் திமுக அரசுக்கு நல்ல பெயர் தான் கிடைக்கும். அம்மா மினி கிளினிக்கை மெருகேற்றி கூட செயல்படுத்தலாம். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மா உணவகம் ஏழை எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. அம்மா உணவகத்தை கருணையோடு தொடர்ந்து செயல்படுத்த கோரிக்கை விடுக்கிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க:முல்லை பெரியாறு அணையின் உண்மை கதை... வதந்திகளை உடைத்தெறியும் பகுப்பாய்வு: சிறப்புப் பார்வை