மதுரை: காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் முருகன் அழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய பல்கலைக்கழக பாதுகாப்பு குழு செயலாளர் முனைவர் முரளி, சிறப்பு விருந்தினராக பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் எல்.முருகனை ஆளுநர் அழைத்திருப்பது அரசியல் சார்பான முடிவாகும்.
தமிழ்நாட்டில் கல்வி அமைச்சருக்கு உரிய மரியாதை தரப்படாமல் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசையே இவ்விழா குறித்து ஆலோசிக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கதாகும். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பொதுவாக கல்வித்துறையில் மற்றும் கலை துறையில் சாதித்தவர்கள் பட்டமளிப்பு விழாப் பேருரை வழங்க அழைக்கப்படுவது வழக்கம்.
தனியாக சிறப்பு விருந்தினர் என்று அழைப்பது வழக்கம் இல்லை. மேலும் பல்கலைக்கழக ஆட்சி குழுவிற்கும் இத்தகவல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படுவது வழக்கம். இந்த வழக்கங்களை மீறி மத்திய அமைச்சர் எல்.முருகனை ஆளுநர் அழைப்பது என்பதும், துணைவேந்தர் ஆளுநர் சொன்னபடி எல்லாம் கேட்பது என்பதும் தமிழ்நாட்டில் உயர்கல்வி அளவில் பிற்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சுகிறோம்.