மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்படும். அந்நேரத்தில் அங்குள்ள குளத்தில் சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் முங்கி எழுவர்.
அதேபோல 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் கும்பமேளா நிகழ்வும் நடத்தப்படும். அந்த மகாமகம் நிகழ்வின்போதே பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதற்கு முன்பாக 16 புனித தீர்த்தங்களில் குளித்து கோயிலுக்குச் செல்வர். இந்நிலையில் மகாமக குளத்தை தூர்வார இந்த ஆண்டும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. மகாமகம் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது மகாமகம் குளத்திலிருந்து நீரை வெளியேற்றுவது நம்பிக்கைகளுக்கு எதிரானது. ஆகவே கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் மகாமகம் குளத்திலிருந்து நீரை வெளியேற்றத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.