சிவகங்கை: கீழடி அருங்காட்சியகத்தின் அடிக்கல் நாட்டு விழா ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழர்களின் தொன்மையை பறை சாற்றுகின்ற கீழடி அகழாய்வு 2014ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ள கீழடியில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று அகழாய்வுகள் இந்திய தொல்லியல் துறை மூலமாக நடைபெற்று வந்த நிலையில் 4, 5, ஆறாம் கட்ட அகழாய்வுகள் மாநில தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் ரூ. 12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்டமாக நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு மதுரை கேகே நகரில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.
இதனையடுத்து நிரந்தர கள அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத் தேர்வுகள் கீழடி கொந்தகை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வருவாய்த் துறையின் சார்பாக நடைபெற்று வந்தன. இச்சூழலில் கொந்தகை வருவாய் வட்டத்திற்குட்பட்ட கீழடி வேல் முருகன் கோயில் எதிரேயுள்ள திடலில் தற்போது பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன.
கீழடி அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் இதனையடுத்து ஜூலை 20ஆம் தேதி, காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்கிறார் என தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.