தமிழ்நாடு தொல்லியல் துறை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழடியில் பிப்ரவரி 19ஆம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியது. இதுவரை ஐந்து கட்ட அகழாய்வுகள் முடிந்துள்ளன.
முதல் மூன்று கட்ட அகழாய்வினை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. அதில் 7 ஆயிரத்து 818 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. அதேபோல், நான்காம் கட்ட அகழாய்வில் 5 ஆயிரத்து 820 பொருள்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 பொருள்களும் கண்டறியப்பட்டன.
தற்போது நடைபெற்று வரும் ஆறாம் கட்ட அகழாய்வில், பிப்ரவரி 19ஆம் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதி வரை, கீழடியில் 950 பொருள்களும், கொந்தகையில் 21 பொருள்களும், மணலூரில் 29 பொருள்களும், அகரத்தில் 786 பொருள்களும் என மொத்தம் ஆயிரத்து 786 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், மேற்கண்ட நான்கு இடங்களிலும் 128 கரிம படிமங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இதில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளங்கள், அகேட் அமெத்திஸ்ட் போன்ற விலைமதிப்பற்ற மணிகள், சுடுமண்ணால் ஆன ஆமை வடிவமைப்பு முத்திரைகள், கால்நடை சார்ந்த விலங்கின் விலா எலும்பு, எடைக்கற்கள், செங்கல் கட்டுமானங்கள் என பல கிடைத்துள்ளன.