தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வார்டு மறுவரையறை பட்டியலை ரத்துசெய்ய கோரிய மனு - பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - வார்டு மறுவரையறை பட்டியலை ரத்து செய்து உத்தரவிட கோரிய மனு

2017ஆம் ஆண்டு காயல்பட்டினம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வார்டு மறுவரையறை பட்டியலை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரிய பொதுநல மனு மீதான விசாரணையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர், வார்டு மறு வரையரை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல்செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Dec 3, 2021, 7:05 AM IST

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் செயலாளர் வாவு சம்சுதீன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நகராட்சி. இங்கு 18 வார்டுகள் உள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தப் பகுதியில் 40 ஆயிரத்து 558 பேர் இருந்தனர்.

தற்போது 65 ஆயிரம் பேர் உள்ளனர். 35 ஆயிரம் வாக்காளர்கள் தற்போது உள்ளனர். காயல்பட்டினத்தில் 18 வார்டுகள் மட்டும்தான் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு காயல்பட்டினம் நகராட்சியில் வார்டு மறுவரையறை நடைபெற்றது. அப்போது இந்த வார்டு மறுவரையறைக்கு காயல்பட்டினம் மக்கள் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் நடத்தப்பட்டது.

ஆனால் இவை எதுவுமே கருத்தில்கொள்ளாமல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதன் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது, இது ஏற்புடையதல்ல. எனவே 2017ஆம் ஆண்டு காயல்பட்டினம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வார்டு மறுவரையறை பட்டியலை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர், வார்டு மறுவரையறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:'பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படுகிறதா?'

ABOUT THE AUTHOR

...view details