தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எஸ்பி விக்ரமன் பணியிட மாற்றத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - pil case

மதுரை: கரூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த விக்ரமனின் பணியிட மாறுதலை திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Jul 16, 2019, 5:06 PM IST

கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த மே 11ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட விக்ரமனுக்கு, சென்னை கணினி துறைக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.

கந்துவட்டி கொடுமைகளை கட்டுப்படுத்தியது, மணல் திருட்டை தடுத்தது, சட்டவிரோத புகையிலை போதைப் பொருட்கள் விற்பனையை தடுத்தது போன்ற பல்வேறு நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்த எஸ்பி விக்கிரமனுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்குப் பின்னால் அரசியல் தலைவர்களின் வற்புறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக பாண்டியராஜன் என்பவர் கரூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை முறையாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டதோடு, 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் இவருக்கு அபராதமும் விதித்துள்ளது. அதேபோல டாஸ்மாக்குக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய பெண் ஒருவரின் கன்னத்தில் அறைந்த சர்ச்சையிலும் இவர் சிக்கினார்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளோடு உள்ள அலுவலர்கள் பலருக்கு இடமாறுதல் வழங்கப்படவில்லை. உதாரணமாக கரூர் டி.எஸ்.பி பல குற்றச்சாட்டுகளோடு, 13 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்திலேயே பணியாற்றி வருகிறார். ஆனால் நல்ல முறையில் பணியாற்றி, பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்த எஸ்.பி விக்ரமன் அரசியல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனை ஏற்க முடியாது. ஆகவே அவருடைய இடமாறுதலை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி முன்னிலையில் இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கை, பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், காவல்துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details