உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுத் திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மதுரையின் கிராமப் புறங்களிலுள்ள காளைகள் கொஞ்சம் கொஞ்சமாய் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டைக் காண இந்த முறை இந்தியப் பிரதமர் மோடியும் வருகிறார் என்பது அரசல்புரசலான தகவலாக இருந்தாலும்கூட, மதுரை மாவட்டம் இன்னும் 50 நாட்களில் விழாக்கோலம் காணவிருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு அருகேயுள்ள கல்லம்பட்டி. பெயர்ப்பலகைக் கூட இல்லாத இந்த சிற்றூரில் அதிகபட்சம் 50 வீடுகள் இருப்பதே அதிசயம்தான். ஒதுக்குப்புறமான குக்கிராமம். அந்தக் கிராமத்திலும் மிக ஒதுக்குப்புறமாக உள்ளது அந்த வீடு.
பசுமை சூழ்ந்த அந்த வெளியில் 'கருப்பன்' மேய்ந்து கொண்டிருந்தார். அந்நியர்களை பார்த்தவுடன் அப்படியொரு செறுமல். அப்போது வீட்டிலிருந்து ஓடி வந்த கனிமொழி, வேக வேகமாய் கருப்பன் காளையை பிடித்து இழுத்து மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். மற்றொரு காளை, கயிற்றால் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது. இருந்தாலும், தனது முன்னங்கால்களால் தரையைப் பெயர்த்து, கொம்புகளால் தூர்த்துக் கொண்டிருந்த காட்சி பயத்தை வரவழைத்தது.
தான் ஆங்கில இலக்கியம் படித்துள்ளதாகவும் எங்களது வீட்டின் மூத்த பிள்ளைகள் காளைகள்தான் என்றும் சிறுவயதிலிருந்தே அவர்களை சுற்றியே தனது நட்பும் சுற்றமும் என்று பேசிய கனிமொழியிடம் இன்னொரு காளையின் வீரம் அப்படியே ஒத்திருந்தது.
தற்போது அவர்களது வீட்டில் நான்கு காளைகளை வளர்த்துவருகிறார் கனிமொழி. காலையில் எழுந்ததும் காளைகளை நடைபயிற்சி, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது, வீட்டிற்கு வந்தவுடன் நெல்லிக்காய், கடலை மிட்டாய், பருத்திக் கொட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவது, குளிக்க வைப்பது எல்லாம் அவருடைய பணிகள்தான். தான் வளர்த்த ஜோதிகா எனும் செவலைக்காளை கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு இறந்து போனதாகச் சொல்லும் கனிமொழி, வீட்டிற்குப் பக்கத்திலேயே அந்ந்த காளையை அடக்கம் செய்து, நாள்தோறும் மாலை வேளையில் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.