தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காமராசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 அறிஞர்களுக்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது...! - awards to the Tamil scholars

மதுரை: காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக ஐந்து தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் பேரவைச் செம்மல் விருது வழங்கப்படவுள்ளதாக துணைவேந்தர் கு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்

By

Published : Sep 26, 2019, 9:08 AM IST

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்த்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்ப்பேரவைச் செம்மல் விருது வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தராக மு. கிருஷ்ணன் பொறுப்பேற்ற பின்னர் தமிழ்ப்பேரவைச் செம்மல் விருது வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இவ்விருதுக்கான தேர்வுக்குழு, துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டது. அதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழறிஞர் செல்லப்பா ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த விருதுக்காகத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் 60 பேர் விண்ணப்பித்திருந்தனர். வந்திருந்த விண்ணப்பங்களில் ஒன்று நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 59 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

துணைவேந்தர் தலைமையிலான தேர்வுக்குழுவின் தீவிர பரிசீலனையை அடுத்து தமிழ்ப்பேரவைச் செம்மல் விருதுக்கு, சிற்பி பாலசுப்பிரமணியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மா. திருமலை, காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் மறைந்த இரா. மோகன், பி. முருகரத்தினம், கு.வெ. பாலசுப்பிரமணியம் ஆகிய ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், இந்த ஐந்து பேரின் பெயரும் இறுதி செய்யப்பட்டு, தமிழ்ப்பேரவைச் செம்மல் விருது வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விரைவில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஐவருக்கும் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது வழங்கப்படவுள்ளதாகத் துணை வேந்தர் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details