மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்த அவசியமில்லாத நிலையலும், குருவிகளை சுடுவது போல மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர். அதோடு துப்பாக்கிச் சூட்டிற்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதும், காவல்துறை அதிகாரிகள் மட்டுமே பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் ஏற்புடையதாக இல்லை.
அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடும் இருந்திருக்கும். தமிழ்நாடு அரசு தற்போது, இது குறித்த விரிவான அறிக்கையை வெளியிடாமல் இருப்பது சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்கிறது. எனவே, அதற்கான அறிக்கையை வெளியிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.