தமிழ்நாடு

tamil nadu

அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படும் வரை என்ன செய்தீர்கள்? மதுரைக் கிளை கேள்வி

மதுரை: அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என அலுவலர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

By

Published : Oct 29, 2020, 2:11 PM IST

Published : Oct 29, 2020, 2:11 PM IST

hc
hc

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”கரூர் மாவட்டம் தாந்தோணி கிராமம் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள ஓடை மற்றும் வாய்க்காலில் மழைக்காலங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்காமல் வாய்க்கால் வழியாக சென்றுவிடும்.

ஆனால், தற்போது ஓடை மற்றும் வாய்க்காலை சிலர் முள் வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதோடு, மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர். மேலும், அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில், இரும்புக்கதவு அமைத்துள்ளனர். இது குறித்து கரூர் தாசில்தார், மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் ஆகியோருக்கு புகைப்படங்களுடன் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் ” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 29) விசாரணைக்கு வந்தபோது, ஓராண்டாக அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், அலுவலர்கள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசு தரப்பில், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய அலுவலர்கள் சென்றால், ஆக்கிரமிப்பாளர்கள் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து போராட்டம் நடத்தினால் அலுவலர்கள் திரும்பி வந்து விடுவார்களா? என்றும், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அலுவலர்கள் என்ன செய்தார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், கடமை தவறிய அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது எனக் கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை உடனடியாக அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:’பொறியாளர்கள் அல்ல பொறியியல் பட்டதாரிகளே உருவாகின்றனர்’

ABOUT THE AUTHOR

...view details