தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இயலாதோரிடம் வட்டிக்கு வட்டி அநியாயமானது! - மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை: கோடிகளில் கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும்போது, சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுவது வேதனையளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

hc
hc

By

Published : Nov 27, 2020, 3:01 PM IST

பெரம்பலூரை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ” திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள தனியார் வங்கியில் (ஃபெடரல் வங்கி) நீண்டகாலக் கடனாக 50 லட்சமும், வீட்டுக்கடனாக 15 லட்சமும் விவசாய நிலங்களை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டது. இதில் வீட்டுக் கடனுக்காக 18 லட்சமும், நீண்ட கால கடன் தொகையில் 25 லட்சமும் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

தொழில் தோல்வி காரணமாக பணத்தை திரும்ப அளிக்க முடியாததால், எனது விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை தனியார் வங்கி மேற்கொண்டது. இதனால் விவசாய நிலத்தை விற்பதற்கு தடை விதிக்க தொடர்ந்த வழக்கில், ரூ.75 லட்சம் பணத்தை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அப்பணத்திற்கான வரைவு காசோலையை சென்னையில் உள்ள தனியார் வங்கி மேலாளரிடம் கொடுக்க சென்றபோது அதனை வாங்க மறுத்து என் மீது வீசி எறிந்தார்.

மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில், விவசாய நிலத்தை தனியாரிடம் ஒப்படைத்து பணம் வசூலிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே, நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவும், தனியாரிடம் பணம் வசூலிப்பதற்காக விவசாய நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்தவும் உத்தரவிட வேண்டும் ” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ” வங்கிகள் பணம் வசூலிக்க 3 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதன் பின்பே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது.

எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கின்றன. குண்டர்களை வைத்து கடன் தொகை வசூலிப்பதற்கு தனியார் வங்கிகள் கடன் வழங்காமலே இருக்கலாம். 1000 கோடிகள் கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால், சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் பணவசூல் என்கிற பெயரில் துன்புறுத்தப்படுகின்றனர்.

நீதிமன்ற உத்தரவை மதிக்க முடியாது எனக்கூறி வரைவு காசோலையை தூக்கி எறிந்த வங்கியின் மேலாளர் அறையின் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி மேலாளர் காணொலி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் “ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details