மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியம் சார்ந்த விஷயங்களும் ஆங்காங்கே தென்பட்டது, 80-90-களில் பிறந்த நபர்களுக்கு உற்சாகமாக இருந்திருக்கும். அந்த வகையில் சித்திரைத் திருவிழாவின் 11ஆம் நாளான இன்று (ஏப். 15) நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் மாசி வீதிகளை சுற்றி சீனி மிட்டாய், ஜவ்வு மிட்டாய் போன்ற பாரம்பரிய விஷயங்களெல்லாம் பொதுமக்களால் வியந்து கவனிக்கப்பட்டன.
நீண்ட பெரிய மூங்கில் கம்பில் நுனியில் கை ஆட்டும் பொம்மைக்குக்கீழே ஜவ்வு மிட்டாயை பண்டலாகச்சுற்றி வைத்து கேட்கும் நபர்களுக்கு, விமானம், வாத்து, மயில் உள்ளிட்ட வடிவங்களில் கையில் வியாபாரி ஜவ்வு மிட்டாயை கட்டிவிடுவார்.
சிறு துண்டு மிட்டாயை கன்னத்தில் ஒட்டிவிடுவது, ஜவ்வு மிட்டாய் வியாபாரிகளின் வழக்கம். தற்போதுள்ள தலைமுறைகளுக்கு இதுபோன்ற ஜவ்வு மிட்டாய் விஷயங்கள் மிக வியப்பாக இருக்கிறது. இன்றைய பொழுதில், ஆர்வத்தோடு இளைஞர்களும் குழந்தைகளும் இந்த மிட்டாயை கைகளில் கட்டிக்கொண்டு சென்றது வித்தியாசமான அனுபவம்.