தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என சொல்ல முடியாது” - கார்த்திக் சிதம்பரம் - ரஜினிகாந்த் என்னுடைய நண்பர்

மதுரை : நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படுமென சொல்ல முடியாது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்

By

Published : Dec 11, 2020, 11:06 PM IST

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இன்று (டிச.11) வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “ரஜினிகாந்த் என்னுடைய நண்பர். அரசியல்வாதியாக அவர் என்ன முடிவெடுக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. இனிமேல் அந்த குழந்தை பிறந்து, எழுந்து, நின்று நிலைப்பாட்டை அறிவிக்கட்டும் பின்பு விவாதிக்கலாம். வருகிற 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றிப்பெறும்.

தமிழ்நாட்டில் தேர்தல் போட்டியானது திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் தான் இருக்கும். மற்றவர்கள் எல்லாம் ஒரு 'ஸ்பாய்லர்' ஆக தான் இருக்கலாமே தவிர வெற்றிபெற வாய்ப்பில்லை. நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என சொல்ல முடியாது.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கை இல்லாத கட்சிகள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருக்கிறார். அந்தந்த கட்சி என்ன கொள்கை என்று அந்தக் கட்சியின் செயலாளர்கள் சொல்வார்கள். எங்களுடைய கட்சியின் கொள்கை பற்றி தெளிவாக விளக்க நான் தயாராக உள்ளேன். அமைச்சர் செல்லூர் ராஜு சொல்லும் இடத்திற்கு வர தயாராக இருக்கிறேன். தொலைக்காட்சியில் கூட விவாதம் நடத்தலாம்.

2-ஜி ஊழல் என்பது பொய்யான பூதம். பூதத்தை கிளப்பினார்கள் அந்த பொய் பூதம் மீண்டும் புதைக்கப்பட்டுவிட்டது. 2-ஜி வழக்கே ஒரு பொய் வழக்கு தான். அந்த பொய் வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டார்கள். புதைக்கப்பட்டு முடிக்கப்பட்ட விஷயத்தை மீண்டும் அதிமுகவினர் தூசி தட்டி கிளப்புகிறார்கள். நாடாளுமன்றத்தில் 2ஜி குறித்து அதிமுகவினர் யாராவது ஆ.ராசாவிடம் விவாதம் மேற்கொண்டால் கண்டிப்பாக அதிமுகவினர் மண்ணை கவ்வுவார்கள்.

பாரத் பந்த் முற்றிலும் தோல்வி என பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருப்பது வேடிக்கை. அவருக்கு வெற்றி என்றால் வேல் யாத்திரை தான் நினைவிற்கு வரும். பாரத் பந்த் அவருக்கு தோல்வி என தெரிகிறது.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சிதம்பரம்

மோடி என்ன பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தாடி வைத்தவன் எல்லாம் பாரதி ஆகிவிட முடியாது.

கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்பது கூட்டணி ஆலோசனைகளுக்கு பின்னர் தீர்மானிக்கப்படும். எந்த இடங்களில் நின்றாலும், அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது, திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் அமையும்” என்றார்.

இதையும் படிங்க :இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் நிலோபர் கபில்

ABOUT THE AUTHOR

...view details