மதுரை: அரசு இராசாசி மருத்துவமனை முதலமைச்சரிடம் உரிய விளக்கம் கேட்டு பெற்றுத் தர உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "புற்று கட்டிகளை அகற்றுவது, மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த நுண்ணிய அறுவை சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்ள பல நவீன உபகரணங்கள் அரசு இராசாசி பல்நோக்கு மருத்துவமனையில் உள்ளன.
சுமார் 55 கோடி ரூபாய் மதிப்பில் இம்மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மதுரை பல்நோக்கு மருத்துவமனை கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பகுதியாக மாற்றப்பட்ட பின்னர், இந்த உபகரணங்கள் அனைத்தும் பயன்பாட்டில் இல்லாத நிலை ஏற்பட்டது. சுமார் 150 நோயாளிகள் மட்டுமே கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை அரசு இராசாசி மருத்துவமனையின் வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்கலாம். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்ட சூழலிலும், பல்நோக்கு மருத்துவமனை வழக்கம்போல இயங்க தொடங்கவில்லை. இதனால் ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
'தேவையில்லையெனில் சேனலை மாற்றிக்கொள்ளலாம்' - சமஸ்கிருத செய்திக்கு தடை கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து!
இதுகுறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மதுரை அரசு ராசாசி பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், "கரோனா நோயாளிகள் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், முக்கிய அறுவை சிகிச்சைகள் மருத்துவமனையின் வேறு பகுதியில் நடைபெறுகின்றன" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், "மதுரை அரசு ராசாசி பல்நோக்கு மருத்துவமனை உபகரணங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்ன விதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன?
சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது எனில், என்ன காரணத்திற்காக சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது? என்பது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.