மதுரை:செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் திரைப்படம் குறித்து கலந்துரையாடினார்கள். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன், இந்த படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
மேலும், கூறிய அவர்,"தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் போன்றோர் படங்களைதான் காலை 4 மணிக்கு எல்லாம் ரசிகர்கள் தியேட்டரில் பார்ப்பார்கள். ஆனால், என்னுடைய இந்தப் படத்தையும் காலை நான்கு மணிக்கு எல்லாம் தியேட்டரில் ஆரவாரத்துடன் பார்த்த மக்களுக்கு நன்றி. இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு சம்பந்தமில்லாத புதுவிதமான முயற்சி. சினிமாவை எப்படி எடுக்கிறார்கள் என்பதை மக்களுக்கு போட்டு காண்பித்து சிங்கிள் சாட் பற்றி விளக்கமாக கூறி இந்த படத்தை எடுத்துள்ளேன்.
இந்த படம் என்பது ரத்தமும் சதையும் கூடிய உண்மையான ஒரு படம். முதலில், உலகத்தரமான படமாக இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும், உலகத்தரமான படம் என்பது எதார்த்தத்தை வெளியில் கொண்டுவருவது தான் என்பதை நான் காண்பித்து இருக்கிறேன்.