மதுரை: மதுரையில் ஜே.சி.குமரப்பாவின் காந்தியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, காந்தி நினைவு அருங்காட்சியகத்துடன் இணைந்து அகிம்சை பொருளாதாரக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் இன்று (செப் 22) தொடங்கிய 'அகிம்சை சந்தை' நிகழ்வில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
கொள்ளைக்காரர் கொள்கைக்காரர் ஆன விதம்: தவிர, வட இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பங்கேற்ற காந்தியவாதி பகதூர் சிங் என்பவர், தனது வாழ்வின் முற்பகுதியில் தான் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் கொடூர கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு மனம் திருந்தி, தற்போது முழு காந்தியவாதியாக மாறி, காந்தியடிகளின் கொள்கை, தத்துவங்கள், அகிம்சை நெறிகளை காண்போருக்கு எடுத்துரைக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாழ்கிறார்.
அட்டூழியக்காரர்கள் கூடாரம்:சம்பல் பள்ளத்தாக்கு என்பது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் ஒருங்கே சந்திக்கும் வறட்சியான பழுப்பு நிற வெட்டவெளியான பகுதி. அதனைக் கடந்து செல்வோரை ஒன்றுமில்லாதவராக ஆக்கும் கொள்ளையர்களின் கூடாரமாக ஒரு காலத்தில் இப்பகுதி திகழ்ந்தது.
இந்தியா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட பள்ளத்தாக்குகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் திகழ்வதுதான் சம்பல் பள்ளத்தாக்கு. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதியில் பல நூறு கி.மீ., தொலைவில் சம்பல் நதியின் கரையில் அமைந்துள்ள பகுதி. கடந்த 1950ஆம் ஆண்டு தொடங்கி இப்பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்திய பல குழுக்கள் இருந்தன. அதில் ஒரு குழுவின் தலைவியாக இருந்தவர்தான்,பூலான்தேவி.
உண்மையில் சொல்லப்போனால் பூலான்தேவியால்தான் சம்பல் பள்ளத்தாக்குப் பகுதி உலகளவில் பெயர் பெற்றுத் திகழ்ந்தது. இங்கு வாழ்ந்த கொள்ளையர்களின் அட்டூழியம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளால் செய்வதறியாது தவித்தன. அவர்கள் திருந்தி வாழ்வதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.
காந்தியவாதியான பகதூர் சிங்: அப்படியொரு முயற்சியில்தான், கடந்த 1972ஆம் ஆண்டு சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 654 கொள்ளையர்கள் அத்தொழிலை விட்டுவிட்டு அகிம்சைவழிக்குத் திரும்பி வந்தனர். அவர்களில் ஒருவர்தான் பகதூர்சிங். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகமும் அகிம்சை பொருளாதாரக் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் 'அகிம்சை சந்தை'க்கு இன்று (செப்.22) வந்திருந்தார். ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு மனம் திறந்து பகதூர்சிங் நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் பேசிய விவரங்களாவன, 'என்னுடைய குழந்தைப் பருவ காலம் தற்போது நினைவில் இல்லை. நான் குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர் இறந்துவிட்டனர். என்னுடைய சொத்துகள் அனைத்தையும் உறவினர்களே அபகரித்துக்கொண்டனர். ஆகையால், நான் யாருமற்ற அநாதையாக தனிமையில் விடப்பட்டேன். இதனால், என் வாழ்க்கை மனம்போன போக்கில் செல்லத் தொடங்கியது. அப்போதுதான் சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்த கொள்ளைக்காரர்கள் என்னை தத்தெடுத்துக்கொண்டனர்.