மதுரை: மதுரையைச் சேர்ந்த ஜான் மார்டின், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதில், "மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இல் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி தொடர்பாக ஜூன் 7ஆம் தேதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஓட்டுநர் பயிற்சி தொடர்பான, மத்திய மோட்டார் வாகன திருத்த விதிகள் ஜூலை 1 ( 2021) முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தப் புதிய விதியில், அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில், ஓட்டுநர் பயிற்சிப் பெற்றவர்கள், உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக்காட்ட தேவையில்லை என்ற புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய திருத்த விதிமுறைப்படி, அரசின் அங்கீகாரம் பெற்ற பயிற்சிப் பள்ளிகள், இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்க வேண்டும். பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள நான்காயிரத்து 187 ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்துவோர் பாதிக்கப்படுவர். குறிப்பாக தமிழ்நாட்டில் ஆயிரத்து 650 ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்துவோர், அங்கு பணிபுரியும் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.