மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், வழக்கறிஞர்கள் அவர்களுக்கென பார்கவுன்சில் நிர்ணயித்துள்ள வழிமுறை படிதான் ஆடையணிந்து, நீதிமன்ற பணிக்கு வர வேண்டும். சில வழக்கறிஞர்கள் அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. சரியான முறையில் ஆடை அணிந்து நீதிமன்ற பணிக்கு வருவது வழக்கறிஞர்களின் கடமையாகும்.
ஆண், பெண் வழக்கறிஞர்களுக்கென, தனித்தனியாக ஆடை வழி முறைகளை பார்கவுன்சில் வகுத்துள்ளது. சில வழக்கறிஞர்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட், பட்டு சேலை அணிந்து நீதிமன்றம் வருகின்றனர். மேலும், கருப்பு அங்கி, வெள்ளைக் கழுத்துப் பட்டை அணிந்து வழக்கறிஞர் பலர் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டதில் ஈடுபடுகின்றனர். இதனால் வழக்கறிஞர் தொழிலுக்கு அவப்பெயர் உண்டாகும் நிலை ஏற்படுகின்றது.