உலகத் தொல்லியல் வரலாற்றிலும், தமிழர் தொன்மை வரலாற்றிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கீழடி அகழாய்வு, 2014ஆம் ஆண்டு தொடங்கியது. தமிழ்நாடு தொல்லியல் குறித்த சாதனையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை கீழடி அகழாய்வு எட்டியுள்ளது. கீழடி மற்றும் பண்டைய மதுரை குறித்து பல்வேறு வகையான ஆய்வுகளும் கருத்துருவாக்கங்களும் அறிஞர்கள் மத்தியில் நிகழ்ந்து வரும் நிலையில், மதுரையை சேர்ந்த தமிழாசிரியரும் ஆய்வாளருமான முனைவர் ராஜா மேற்கொண்ட ஆய்வில், கீழடி குறித்து 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியத்தின் முக்கிய இலக்கியமான சிந்து பாடலில், கீழடி வழிநடை சிந்து, கீழடி மகிமை சிந்து என்ற பெயரில் 2 நூல்கள் வெளியாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தமிழாசிரியர் முனைவர் ராஜா கூறுகையில், 'மதுரை பதிப்பு வரலாறு 1835-லிருந்து 1950 வரை என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வுக்கான தரவுகளைத் தேடியபோதுதான் கீழடி குறித்து முதுகுளத்தூரைச் சேர்ந்த பூலாருசாமிப்பிள்ளையால் 1906ஆம் ஆண்டு எழுதப்பட்ட கீழடி வழிநடைச் சிந்து, கீழடி மகிமைச் சிந்து ஆகிய இலக்கிய நூல்களை கண்டறிய முடிந்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய தொல்லியல்துறை மேற்கொண்ட அகழாய்வுக்குப் பிறகுதான் கீழடி குறித்து நாம் அறிய முடிந்தது. பொதுவாகவே இலக்கியங்களின் வழியான வரலாறுகள்தான் சான்றாக உள்ளன. ஆனால், அதனை உறுதிப்படுத்துவதற்கான பிற சான்றுகள் தொல்லியல் அகழாய்வின் வழியேதான் கிடைக்கின்றன. அந்த வகையில் கீழடி அகழாய்வில் அதன் பழமை கி.மு.6ஆம் நூற்றாண்டு என அங்கு கிடைத்த தொல்பொருட்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கீழடிக்கான இலக்கியச் சான்றுகள் இதுவரை கிடைக்காத நிலையில், கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்தூரைச் சேர்ந்த பூலாருசாமிப்பிள்ளையால் எழுதப்பட்ட கீழடி வழிநடைச் சிந்து, கீழடி மகிமைச் சிந்து ஆகியவை கிடைத்துள்ளன.
சிந்து என்ற பா வகை இலக்கியம் கடந்த கடந்த 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானது. மயிலை சீனி வேங்கட சாமி. இந்த சிந்து பா வகையை அடிப்படையாகக் கொண்டுதான் கீழடி குறித்த மகிமைச் சிந்தும், வழிநடைச் சிந்தும் எழுதப்பட்டுள்ளது. கீழடி குறித்து இலக்கிய வகையில் கிடைத்த முதல் சான்று இதுவாகும். கீழடி மகிமைச் சிந்து என்பது கீழடியை புராண, இதிகாசங்களோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டதாகும்.