தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஏலத்தோட்ட விவசாயி முருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.
அதில், "போடியில் ஏலத் தோட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் கல்லூரி (சி.பி.ஏ. கல்லூரி) ஒன்று நடத்தப்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியானது மதுரை காமராஜர் பல்கலைக்கழக மானியக்குழுவின் 100 விழுக்காடு நிதியுதவியுடன் செயல்பட்டுவருகிறது. கல்லூரியில் பணியாற்றும் முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் அரசுதான் சம்பளம் வழங்கிவருகிறது.
ஆனால் இந்தக் கல்லூரியை நிர்வகித்து வருபவர்கள், ஊழியர்கள் பணியிடம் நிரப்புவதில் முறைகேடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். 2015, 2016ஆம் ஆண்டுகளில் கல்லூரியில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவில் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் உள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மேலும், "தற்போது 14 உதவிப் பேராசிரியர், முதல்வர் பணியிடத்திற்கு ஜனவரி 28ஆம் நாள் (இன்று) நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக நாளிதழில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பணியிடங்களுக்கு மறைமுகமாக ஆள்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் 5.6 கோடி ரூபாய் வரை கையூட்டு பெறப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் பணி நியமனத்தை தடைசெய்து, இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட வேண்டும். பணி நியமனங்கள் குறித்து லஞ்சம், ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து விசாரித்த அவர்கள், பணியிடம் நிரப்புதல் குறித்து உயர் கல்வித் துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என்றும், மேலும் பணியிடம் நிரப்புதல் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்குள்பட்டது எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:
90 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ரயில்வே பட்ஜெட்!