தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயில் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி ஏரல் பகுதியைச் சேர்ந்த மந்திரகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், " ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் அக்டோபர் 20ஆம் தேதி மாலை 04.30 மணி அளவில், ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயிலிலிருந்து சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் ஊர்வலமும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்நிலையில், ஊர்வலத்திற்கு அனுமதி தரக்கோரி கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி ஏரல் காவல் நிலைய ஆய்வாளரிடம் மனு அளித்த நிலையில், அக்டோபர் 10ஆம் தேதி அனுமதி மறுத்து ஏரல் காவல் ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, அக்டோபர் 20ஆம் தேதி சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் 100 பேர் மட்டுமே ஊர்வலத்தில் கலந்து கொள்வோம் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்வை முடித்து விடுவோம். ஆகையால், 20ஆம் தேதி மாலை ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதையேற்ற நீதிபதி அக்டோபர் 20ஆம் தேதி மாலை ஏரல் பகுதியில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:‘ரஜினிகாந்த் ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு உடையவர்’ - திருமா சீண்டல்