தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம்: நீர்வள ஆதார திட்ட இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: கல்லணைக் கால்வாயில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் வண்ணம் கான்கிரீட் தரைத்தளம் அமைப்பதை நிறுத்தக் கோரிய மனுவுக்கு தமிழ்நாடு நீர்வள ஆதார திட்ட இயக்குநர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

madurai highcourt
உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Jun 10, 2021, 5:55 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில்,"கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. சுமார் 148.43 கி.மீ நீளமுடைய கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் ரூ.2,639.15 கோடி மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணி தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு 6 மாதங்களில் நீர்வரத்தை கொண்டுள்ள இக்கால்வாய், நீர்வரத்து அல்லாத மீதமுள்ள மாதங்களில், அப்பகுதியிலுள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்கான நிலத்தடி நீரை வழங்கி வருகிறது.

ஆனால், தற்போது மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணியில் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால், நீர் பூமிக்குள் செல்ல வாய்ப்பில்லை, இதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கால்வாயில் கான்கிரீட் தளத்தின் அளவு உயர்த்தப்படுவதால், முழு கொள்ளளவான 4,200 கனஅடி நீர் கால்வாயில் செல்ல முடியாது.

இதன் காரணமாக, வெள்ளத்தை தாங்கும் திறன் இல்லாமல் உடைப்பு ஏற்படும். எனவே, கல்லணைக் கால்வாயில், தற்போது 20 சதவீத பணிகள் முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளில் தரைத்தளத்தில் கான்கிரீட் தளம் அமைக்காமல் , கரைகளின் பக்கவாட்டு பகுதிகள், பாலங்கள், படித்துறைகளை கான்கிரீட் கட்டுமானத்தால் பலப்படுத்தி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கான்கிரீட் தளம் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கான்கிரீட் தளங்களின் இடையே நீர் செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இம்மனு குறித்து தமிழ்நாடு நீர்வள ஆதார திட்ட இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details