திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ”கடந்த 17.07.20 உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு, தனியார் கல்லூரிகள், பள்ளிகள் 40 விழுக்காடு கல்விக்கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூல் செய்த போதிலும், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கரோனா காலத்தில் சில மாதங்கள் தவிர பல மாதங்களுக்கு உரிய முறையில் நிர்வாகங்கள் ஊதியம் வழங்கவில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்புகார்கள் குறித்து விசாரிக்க தனி இணைய முகவரி வழங்கப்பட்டு, அதில் புகாரளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம், தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 விண்ணப்பங்களை பெற்றுள்ளன. 461 பொறியியல் கல்லூரிக்காக இந்த சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 90 விழுக்காடு கல்லூரிகள் தனியார் கல்லூரிகள்.
ஆனால், கரோனா காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான ஊதியம் தற்போது முறையாக வழங்கப்படவில்லை. தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை மிகுந்த சோகத்தில் உள்ளது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களை கல்லூரி நிர்வாகம் பல மாதங்களுக்கு முன்பே பணிநீக்கம் செய்து விட்டது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு கரோனா காலத்தில் உரிய முறையில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை தற்போதைய பொறியியல் சேர்க்கைக்கான, கலந்தாய்வை நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளார்.