விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், "நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நரிக்குடி ஒன்றிய பஞ்சாயத்தில் 14 வார்டுகள் உள்ளன. அதில் மூன்றாவது வார்டு கவுன்சிலராகத் திமுகவைச் சேர்ந்த நான் வெற்றிபெற்று ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். என்னை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் போட்டியிட்டார்.
இதைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது, அதில் இருவரும் சமமாக, ஏழு வாக்குகள் பெற்றோம். எனவே, குலுக்கல் முறையில் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அப்போது, தேர்தல் அலுவலகத்தில் அதிமுகவைச் சேர்ந்த 14ஆவது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் திடீரென்று தேர்தல் நடந்த அறையில் கலவரத்தில் ஈடுபட்டார்.
மேலும், அவரது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பொருள்களைச் சூறையாடினார். மேலும் பாதுகாப்புப் பணியிலிருந்த அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரையும் தாக்கினார்கள், இதில் அவர் காயமடைந்தார். இவை அனைத்தும் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.