கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி நடத்தக் கோரி இளஞ்செழியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ” கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் 900 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழா நாளை (4.12.2020) நடக்கவுள்ளது.
இதற்காக எங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், கோவில் உதவி ஆணையரிடம் சென்று, குடமுழுக்கின்போது தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம் ஓதப்பட வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. இதனால் பாரம்பரியமிக்க எங்கள் கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும் “ கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தரப்பு வழக்கறிஞர், குடமுழுக்கு விழாவுக்காக 25 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும் என்றால், ஓதுவார்கள் பெயர்களை ஏன் அழைப்பிதழில் சேர்க்கவில்லை எனக் கேள்வியெழுப்பினர்.