மதுரை அழகர்கோவில் நாயக்கன்பட்டி எம்.ஏ.வி.எம்.எம். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சரவணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"நாயக்கன்பட்டியில், எம்.ஏ.வி.எம்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, போதை மறு வாழ்வு மையம் செயல்படுகிறது. எங்கள் கல்லூரியில் 1025 மாணவர்களும், 130 மாணவிகளும் பயில்கின்றனர். இங்குள்ள விடுதியில் 120 மாணவர்கள் தங்கியுள்ளனர். மறுவாழ்வு மையத்தில் 60 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், போதை மறுவாழ்வு மையத்தின் அருகிலேயே டாஸ்மாக் கடை திறக்க, அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். குடி போதையிலிருந்து மீட்பவர்களுக்கான மறுவாழ்வு மையம் அருகே டாஸ்மாக் கடை திறப்பது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் இம்மையம் அருகே டாஸ்மாக் கடை, மதுபான கூடம் திறக்கவோ, வேறு இடங்களிலிருந்து இடமாற்றம் செய்யவோ கூடாது. அப்படி அனுமதி பெற்றிருந்தால் அதற்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.