மதுரை: நெல்லையைச் சேர்ந்த சின்ன துரை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நெல்லை கோட்ட தபால்துறையில் அஞ்சல் உதவியாளராக கடந்த 2005ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட எனது சம்பளத்தில் 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டது. என்னிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தில் 60 விழுக்காடு ஓய்வின்போது வழங்கப்பட்டது. மீதமுள்ள 40 விழுக்காடு பணத்தில் இருந்து மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பிடித்தம் செய்த பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
அதனால், எனக்கு மாதந்தோறும் 960 ரூபாய் தான் ஓய்வூதியமாகக் கிடைக்கிறது. இது எனது வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை நிர்ணயிக்கவும், கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்குவதை உறுதி செய்திடவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.