மதுரை சேர்ந்த வழக்கறிஞர் அன்புநிதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஆறு, ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக ரூ.1,250 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக்கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே காரணமாகும். எனவே தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகள், அவற்றின் சர்வே எண், ஒதுக்கப்படும் நிதி, பணிக்காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.