மதுரையைச் சேர்ந்த அருளானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலத்தில் ஏகநாதர் கோயிலுக்கு சொந்தமான குருமண்டபம் ஒன்று உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஏகநாதர் குரு மண்டபம் வைகை நதி பாரம்பரியமான கீழடி அகழாய்வுடன் தொடர்புடையது.
ஏகநாதர் குரு மண்டபத்தில் பள்ளிப்படை வட்டெழுத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் சுமார் 2,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என ஆய்வில் தெரியவருகிறது. ஏகநாதர் குரு மண்டபத்தில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டால் சங்க காலத்து எழுத்துகளும் வரலாற்று சிற்பங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் கிண்ணிமங்கலம் கிராமத்தில் ஏகநாதர் குரு மண்டபத்திற்கு சொந்தமான இடங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஏகநாதர் குரு மண்டபம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகழாய்வுப் பணி நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.