மதுரை: நீலகிரியை சேர்ந்த வினோத் குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "விதிப்படி முனைவர் பட்டம் பெற்றவர்கள் அல்லது NET, SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளை பயிற்றுவிக்க தகுதியானவர்கள்.
அவ்வாறு தகுதியுடைய நபர்கள் பெருமளவில் கிடைக்காததால், பலரும் கௌரவ பேராசிரியர்களாக அழைக்கப்பட்டு, பல அரசு சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கின்றனர். மேலும், பல அரசு சட்டக் கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், போதுமான அளவு பேராசிரியர்கள் இல்லை.
ஆகவே வரும் கல்வியாண்டில் பிரிவில் நிபுணத்துவம் மிக்க பேராசிரியர்களை நியமிக்காமல், புதிய பிரிவுகளை கொண்டு வர இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் சொந்த மாவட்டங்களில் ஒரே சட்டக்கல்லூரியில் பல பேராசிரியர்கள் பணியாற்றும் நிலையில், சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்களை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜயகுமார், ஜெயச்சந்திரன் அமர்வு, மனுதாரரின் கோரிக்கை நன்மை பயக்கும் வகையில் உள்ளது. ஆனால் சொந்த மாவட்டங்களில் பணிபுரிவோரை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யும் வகையில் கூறியிருப்பது, அவருக்குப் பின்புலமாக வேறு எவரும் இருப்பாரோ? என எண்ணச் செய்கிறது. ஆகவே மனுதாரர் முறையான கோரிக்கையுடன் மனுதாக்கல் செய்யலாம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: கூடுதலாக பாமாயில் சப்ளை செய்யக்கூறிய தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி!