தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏழைகளுக்கான நிலங்களில் மணல் குவாரி இயங்க அனுமதித்தது எப்படி - நீதிமன்றம் கேள்வி

ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் தனியாருக்கு மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கியது எப்படி என கேள்வியெழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற செய்திகள், உயர்நீதிமன்ற மதுரை கிளை, sand mining on poor peoples land, மதுரை செய்திகள், court news in tamil, court news tamil
உயர்நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Jun 10, 2021, 4:53 PM IST

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய இடமற்ற மக்களுக்கு அரசு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு இடம் வழங்கப்பட்டது.

இந்த இடத்தை வருவாய் துறை அலுவலர்கள் சட்டத்துக்கு புறம்பாக ஆவணங்கள் தயார் செய்து தனியார் நிறுவனங்கள் மணல் குவாரிகள் நடத்துவதற்காக ஆறு ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கொடுத்துள்ளனர்.

பின்னர், அரசால் நிலம் வழங்கப்பட்ட ஏழை மக்கள் விவசாயம் மற்றும் வீடு கட்டுவதற்கு சென்றபோது மணல் குவாரி உரிமையாளர்கள் அவர்களை தடுத்து விரட்டியுள்ளனர்.

இதுகுறித்து மோசடியில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு வழங்கிய இடங்களை தங்களுக்கு மீட்டுத்தர வேண்டும் என அரசிடம் கோரிக்கைகள் வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் தயாரித்த அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து இடங்களை மீட்டுத்தர வேண்டும்" என மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இடமற்ற ஏழைகளுக்கு வழங்கிய இடம் எவ்வாறு மணல் குவாரிக்கு கொடுக்கப்பட்டது? இதற்கு துணை போன அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், இதில் சம்பந்தப்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details