திருச்சியைச் சேர்ந்த நித்திய சௌமியா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வீடற்ற ஏழை முதியவர்கள் பலர் சாலை ஓரங்களிலும், கோவில் மண்டபங்களிலும், பூங்காக்கள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் எவ்விதமான அடிப்படை, சுகாதார வசதி, மருத்துவ வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக பொது சுகாதார சேவை மையங்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரை ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்டோரின் நலனுக்காக குறிப்பிட்ட திட்டங்கள் எதுவும் பொது சுகாதார சேவை துறையிடம் இல்லை.
தங்களுக்கு தேவையானவற்றை தங்களால் செய்து கொள்ள இயலாத முதுமை நிலையில், நோய்வாய்பட்டுப் படுகையில் அவர்களின் நிலை மேலும் கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. சென்னை மருத்துவமனைகளில் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கான சிறப்பு மறுவாழ்வு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியது. தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்த முயற்சி முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை எடுத்த பின்பு வேறு இடங்களுக்கு செல்ல வழியில்லாத முதியவர்கள் இந்த சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.