மதுரை: மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலைய கட்டட கடை வாடகைதாரர்கள் சங்கச் செயலாளர் அப்துல் காதர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் 88 கட்டட கடை வாடகைதாரர்கள் உள்ளோம். 2020 மார்ச் 24ஆம் தேதி உலகையே அச்சுறுத்திய கரோனாவால் எங்களது கடைகளையும் மூட சொல்லி உத்தரவிட்டனர். இதனால் கடையிலிருந்த பொருட்களுடன் எங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றுவிட்டோம்.
இதில் கடைக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாமல் நாசம் அடைந்து விட்டன. இச்சூழலில் 2020 மார்ச் முதல் செப்டம்பர் 29, 2020 ஆம் தேதி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்த நிலையிலும், வாடகையை கட்ட நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
இதுகுறித்து நாங்கள் மாநகராட்சியில் முறையிட்டபோது கடந்த ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வாடகை கட்டுவதில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது. ஆனால் உலகமே முடங்கி இருந்த நிலையில், எங்களது கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மேலும் மே மாதம் முதல் செப்டம்பர் வரை உள்ள ஐந்து மாதங்களுக்குள் கடை வாடகை வசூலிக்க கூடாது என கோரி அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்தோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை தாரைவார்க்கும் மத்திய- மாநில அரசுகள் - காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு!
ஆனால் ஐந்து மாதங்களுக்கு வாடகை கட்ட வேண்டுமென நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றனர். எனவே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் பாதிக்காத வகையில், ஐந்து மாதத்திற்கான வாடகை வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.