மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்வது, கொலை செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கி முனையில் மீனவர்களை கடத்துவது, சட்டவிரோதமாக சிறையில் அடைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
30 ஆண்டுகளாக இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் போர் நடைபெற்று வந்தது. 2009ஆம் ஆண்டு இலங்கை அரசிடம் சரணடைந்த ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசு சட்டவிரோதமாக கொன்று குவித்தது.
பல நூறு ஆண்டுகளாக கச்சதீவு தமிழ் மன்னர்களின் கையில் இருந்தது. அதன் பின்பு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும், இந்திய அரசாங்கத்திடமும் இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கச்சத்தீவு குறித்து ஒப்பந்தமும் போடப்படவில்லை. இந்தியா - இலங்கை இரண்டு நாடுகளும் எல்லைகளை மட்டுமே அப்பகுதியில் பிரித்துக் கொண்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 500 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மனித உரிமை ஆணையத்தில் முதல் கோட்பாடு, மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே. ஆனால் ஐநா மனித உரிமை ஆணையம் இது குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முடிவும் தற்போதுவரை எட்டப்படவில்லை.
2013, மே 3ஆம் தேதி தமிழ்நாடு அரசு இந்திய மீனவர்களை காப்பாற்றுவதற்காக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை அதுதொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறைச்சாலையில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சரியான உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. தமிழ்நாடு மீனவர்கள் குறித்து மத்திய அரசு எந்த ஒரு கவனமும் கொள்ளவில்லை.
சமீபத்தில் கேரளா எல்லைக்குள் இத்தாலி கப்பல் நுழைந்து கேரளா மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றனர். உடனடியாக இந்திய அரசு இரண்டு இத்தாலிய மாலுமிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.