சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் 292ஆவது குருமகா சந்நிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த 13ஆம் தேதி பரிபூரணம் அடைந்தார்.
அவரது உடல் ஆதீன நடைமுறைப்படி முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தில் அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 14ஆம் தேதி தருமை ஆதீனம் ஞானாசிரிய அபிஷேகம், கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293ஆவது மதுரை குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் 10 நாள்கள் முடிவடைந்த நிலையில் இன்று 292ஆவது குருமகா சந்நிதானம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குருபூஜை நடத்தப்பட்டது. இதனையடுத்து மதுரை ஆதீனத்தின் 293ஆவது குருமகா சந்நிதானமாக மதுரை ஆதீன மடத்தில் உள்ள பீடத்தில் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு தருமபுர ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானம் கைலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகள் முன்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் சார்பில் விடுபட்டுப்போன மதுரை மீனாட்சியம்மன் கோயில் உஷாகால கட்டளைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும், மதுரை ஆதீன திருமடத்தில் நித்ய பூஜை, மாகேஸ்வர பூஜை, அன்னதானம் வழங்கப்படும், மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான நான்கு கோயில்களிலும் தினசரி நித்யபடி பூஜைகள் நடத்தப்படவும், குடமுழுக்கு உள்ளிட்ட திருப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு உத்தரவுகளில் 293ஆவது குருமகா சந்நிதானம் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு மடங்களின் ஆதீனங்கள் சார்பிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஆசிபெற்றுச் சென்றனர்.