மதுரை மாநகர் வடக்குத் தொகுதி, மதுரை மத்திய தொகுதி வாக்குச்சாவடி வாரியாக கமிட்டி கூட்டம், செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஹெச். ராஜா, “தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோயில்களில் ஆண்டுதோறும் மாநில அரசின் தணிக்கை அலுவலர்களைக் கொண்டு தணிக்கைசெய்ய வேண்டும்.
இரண்டு ஆன்மிக கட்சிகள் ஒரே கொள்கையுடன் இருந்தால் கூட்டணி வைப்பதில் தவறில்லை; ரஜினி ஆன்மிக அரசியல் செய்வதால் எங்களுடன் இணைந்து செயல்படலாம். அவ்வாறு இல்லாமல் அவருடைய கொள்கை எங்கள் பாஜகவுடன் ஒத்துப்போகலாம்” என்றார்.
சசிகலா வந்தால் பாஜகவுடன் கூட்டணி தொடருமா பாஜக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, "அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம்; அப்பாவுக்கு அண்ணனாக இருந்தால் பெரியப்பா என்போம்; தம்பியாக இருந்தால் சித்தப்பா; தங்கையாக இருந்தால் அத்தை மட்டுமே அத்தைக்கு மீசை முளைத்தால் பாஜக ஆதரவு தரும்" என்று நகையாடினார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் மட்டும் பாஜக ராஜா அல்ல; தமிழ்நாட்டிலும் ராஜாதான் என்று கூறிய அவர், மூன்று தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, இது குறித்து பாஜக மாநிலக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுசெய்து அறிக்கை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.