தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் மருத்துவப் படிப்பை கைவிடுவது வலி மிகுந்தது!' - மதுரை செய்திகள்

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல வலிகளுக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த இயலாமல், படிப்பை பாதியிலேயே கைவிடுவது வலி மிகுந்தது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Madurai High Court
Madurai High Court

By

Published : Nov 20, 2020, 3:33 PM IST

மதுரை: நெல்லையைச் சேர்ந்த கிரஹாம்பெல் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மருத்துவக் கல்விக் கட்டண நிர்ணய குழு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணங்களை குறைக்காமல், சென்ற ஆண்டின் கட்டணத்தையே நிர்ணயித்தும், சில வகை மருத்துவக் கல்வி கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியும் உள்ளது.

தமிழ்நாடு மாணவர்களில் 40 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள், நீட் தேர்வினால் சென்ற ஆண்டு அவர்களில், 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. இந்த வருடம் தமிழ்நாடு அரசு 7.5 விழுக்காடு மருத்துவ கல்லூரி இடங்களை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளது.

இருந்தும் அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அம்மாணவர்கள் அதிகப்படியான கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாமல், படிப்பை பாதியில் கைவிடும் சூழ்நிலை உருவாகும்.

ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடரும் விதமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்வி கட்டண நிர்ணயத்தை ரத்து செய்தும், கட்டணத்தைக் குறைவாக நிர்ணயிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, மூத்த வழக்கறிஞர் ஒருவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த அரசுப்பள்ளி மாணவரின் கட்டணத்தை ஏற்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல வலிகளுக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த இயலாமல், பாதியிலேயே படிப்பை கைவிடுவது வலி மிகுந்தது.

அரசு நல்ல நோக்கத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, மூத்த வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள் ஏழை மாணவர் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.

தொடர்ந்து இது குறித்து, சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர், செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:மதுரை தீ விபத்து குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்துக! நீதிமன்றத்தில் முறையீடு

ABOUT THE AUTHOR

...view details