மதுரை: மதுரையை சேர்ந்த திருப்பதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை வடக்கு தாலுகாவிலுள்ள எங்கள் பகுதியில் சுமார் 21.20 ஏக்கர் பரப்பளவில் சம்பந்தர் ஆலங்குளம் உள்ளது. இந்த கண்மாயில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்றி நீர் நிலையை இயல்பு நிலைக்கு கொண்டுவரக் கோரி ஏற்கனவே மனு செய்து இருந்தேன்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கண்மாயில் 30 ஆக்கிரமிப்புகள் அடையாளம் கண்டுள்ளதாகவும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 8 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது. தொடர்ந்து 22 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வரத்து கால்வாய் முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர். ஆனால், அலுவலர்கள் இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பொதுப்பணித்துறை செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆஜராகி, ஆக்கிரமிப்புகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை காட்டி விளக்கினார்.