மதுரை அரசு ராசாசி மருத்துவமனை தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் மிகப்பெரிய அரசு மருத்துவ சேவை நிறுவனமாகும்.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் பல்வேறு சிகிச்சைகளுக்கு இங்கு மருத்துவம் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். அதேபோன்று இங்குள்ள மகப்பேறு இயல் துறையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன.
பிரசவத்தின்போது பெண்களுக்கு குழந்தை பிறந்தபிறகு, அவர்களிடம் அனுமதி பெறாமல், வலுக்கட்டாயமாக 'காப்பர் டி' என்ற கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாகவும்; இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திடீரென ஏற்பட்ட வயிற்று வலி
இது குறித்து மதுரை நகர்ப்புறத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “கடந்த நவம்பர் 12ஆம் தேதி மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் எனக்கு 2ஆவது குழந்தைப் பிறந்தது.
தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும் அளவிற்கு போதுமான வசதிகள் இருந்தும்கூட, அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்வோம் என்ற வைராக்கியத்தின் அடிப்படையிலும், அதன் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலும், எனது கணவரின் முழு ஒத்துழைப்போடு மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தேன்.
பிரசவ வலி ஏற்பட்ட பிறகுதான் அங்கு சென்றோம். மருத்துவமனைக்குச் சென்ற சில மணி நேரத்திலேயே எனக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
முதல் குழந்தை பிறந்தபோது இருந்ததைவிட மிகவும் நிறைவாக உணர்ந்தேன். குழந்தைப் பிறந்து இரண்டு நாள்கள் வரை எனக்கு எந்தவித பிரச்னைகளும் இல்லை. 3ஆவது நாளிலிருந்து எனக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. குழந்தை பிறந்தால் இருக்கக்கூடிய இயல்பான வலியாக அது எனக்குத் தோன்றவில்லை. ஒருவேலை வயது அதிகமாகிவிட்டதால் ஏற்படக்கூடிய வலியாக இருக்குமோ என்ற அச்சம் இருந்தது.
வலுக்கட்டாயமாக 'காப்பர் டி' பொருத்தும் மருத்துவர்கள்
எனது படுக்கைக்கு அருகிலிருந்த ஒரு பெண்ணுக்கும் எனக்கு பிரசவம் நிகழ்ந்த அதே நேரத்தில் அவருக்கும் நிகழ்ந்திருந்தது. அப்போது அவர் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதற்கான வேலையில் மும்முரமாக இருந்தார்.
அப்போது அவருக்கு 'காப்பர் டி' பொருத்தப்பட்டதை எனது கண்ணால் நான் பார்த்தேன். குடும்பக்கட்டுப்பாடு செய்யும்போது எதற்காக 'காப்பர் டி' பொருத்திக் கொள்கிறீர்கள்? என நான் கேட்டபோது, 'எனக்கு அதையெல்லாம் பொருத்தவில்லையே' என்று அந்தப் பெண் கூறினார்.
அப்போதுதான் எனக்கும் அதுபோன்று 'காப்பர் டி' பொருத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட இயல்புக்கு மாறான வலி குறித்து பணியிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் கேட்டேன்.
அப்போதுதான் அவர் எனது நோயாளர் அறிக்கையைப் பார்த்துவிட்டு, 'காப்பர் டி' பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். அப்போது அவரிடம் இதை ஏன் எனக்குத் தெரியப்படுத்தவில்லை, 'காப்பர் டி' பொருத்தக் கூறி நாங்கள் யாரும் சொல்லாதநிலையில், எங்களுக்கு எவ்வாறு அதுபோன்று பொருத்தலாம் எனக் கேள்வி எழுப்பினேன்.
அத்துமீறும் மருத்துவர்கள்
இதற்கு எந்தவிதப் பதிலும் தரவில்லை என்பதோடு இதனை கொஞ்சமும் பொருட்படுத்தவே இல்லை. 'காப்பர் டி' பொருத்துவது குறித்து குறைந்தபட்சம் அனுமதிகேட்டிருக்க வேண்டும்.