தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; 2 மாதங்களில் கிளியர் செய்யணும்" - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! - கன்னியாகுமரி மாவட்டம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட பகுதிகளை இரண்டு மாதங்களில் அகற்றி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

By

Published : Jul 31, 2022, 7:38 PM IST

மதுரை: 'சட்டம் ஒழுங்கு பிரச்னையைக்காரணம் காட்டி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதில்லை; இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட பகுதிகளை இரண்டு மாதத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியைச்சேர்ந்த சுவாமிதாஸ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம், குளத்தூர் பகுதியில் பறக்கை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் 16 கிலோமீட்டர் வரை சென்று சுசீந்திரம் கால்வாய் உடன் இணைகின்றது. இந்த கால்வாயில் இரு புறங்களிலும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இந்த கால்வாய் நாகர்கோயில் மக்களின் பிரதான நீர் ஆதாரமாகத்திகழ்கின்றது. இந்த கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாக, மழை நீர் வடிந்து செல்வதற்கு பிரச்னையான சூழல் நிலவுகிறது. எனவே, இந்தப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் ஆனந்தி அமர்வை முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, 'தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும், அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்?' எனவும் கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவுவதாகத் தெரிவித்தனர்.

இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, 'தமிழ்நாட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள், அரசு நிலங்கள், புறம்போக்கு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையினை காரணம் காட்டி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்றால் அதற்கு உரிய அலுவலர்களை நியமித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் அரசு ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாகக்கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைகின்றது. நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு இடங்கள் ஆக்கிரமிப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின்றது.

எனவே, இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை 2 மாதங்களில் அகற்றி அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'சேலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது புத்தர் சிலை தான்' - அகழாய்வுத்துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details