மதுரைதனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைப்பெற்றுவந்த தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று காலமானார். இவரின் அரசியல் பயணம் குறித்து இங்கே காணலாம்.
மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் சட்டப்பேரவை சபாநாயகராகவும், மத்தியில் பாஜகவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், அதே சமயம் அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தவர், சேடப்பட்டி முத்தையா.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சேடப்பட்டி தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வூரின் பெயரே, அவரின் பெயருடன் இணைந்து அவருக்கு அடையாளம் ஆகி விட்டது. எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து விலகிய போது, அவருடன் இணைந்து தோள் கொடுத்தார் சேடப்பட்டி முத்தையா. அன்றைய நாட்களில் அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவருக்கு இணையாக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் செல்வாக்கு பெற்று திகழ்ந்தார்.
எம்.ஜி.ஆருக்கு பின்னர் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமான தலைவராக இருந்தார். தான் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளானார்.