சட்டப்பேரவை தேர்தல் களத்தில் சகாயம் அரசியல் பேரவையின் ஆதரவோடு, தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் வளமான தமிழகம் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. இவற்றின் வேட்பாளர்கள் 20 பேர் தமிழகம் முழுவதும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் நாகஜோதியை ஆதரித்து, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தேர்தலின்போது இதே மதுரையில் ஆட்சியராக நான் பணி செய்தேன். தற்போது காலம் தலைகீழாக மாறியுள்ளது. நாட்டில் உள்ள தேசிய இனங்களை மதரீதியாக பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் பாஜகவை நாங்கள் முழு மூச்சுடன் எதிர்ப்போம். நடிகர் ரஜினி என்னை சந்திக்க விரும்பிய போது கூட, அவர் பாஜகவின் கையாள் என்பதால் நான் அதனை தவிர்த்துவிட்டேன்.
அதிமுக திமுக இரண்டையும் சம அளவில் எதிர்க்கிறோம். அதிமுக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நான் பல துறைகளுக்கு பந்தாடப்பட்டேன். இதற்கு மேல் இவர்களோடு இருக்க முடியாது என்பதற்காகவே பணியிலிருந்து வெளியேறினேன். கிரானைட் ஊழல் வழக்கில் ஆய்வுக்கு சென்று நள்ளிரவில் சுடுகாட்டில் படுக்க நேர்ந்த போது, சுடுகாட்டில் இருக்க கூட பயமில்லை, ஆனால், சுதந்திர நாட்டில் நடமாட தான் பயமாக உள்ளது என்றேன். அந்த நிலை இன்னும் தொடர்கிறது.
’நேர்மையாக இருந்ததால் அதிமுக ஆட்சியில் பந்தாடப்பட்டேன்’ கால அவகாசம் குறைவாக இருந்த காரணத்தால் நாங்கள் தற்போது வெறும் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். போட்டியிடும் இளைஞர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிட மறுத்து விட்டேன். நல்ல அரசியலை தருவதற்காக களம் இறங்கியுள்ள எங்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கமல் ஹாசனை விவாதத்திற்கு அழைத்த ஸ்மிருதி இரானி