தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 20, 2022, 9:52 PM IST

ETV Bharat / city

மதுரை அருகே கி.பி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'வளரி வீரன்' நடுகல் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே உள்ள தி.குன்னத்தூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ’வளரி வீரன்’ சிற்பம் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை அருகே கி.பி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ’வளரி வீரன்’ நடுகல்  கண்டுபிடிப்பு
மதுரை அருகே கி.பி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ’வளரி வீரன்’ நடுகல் கண்டுபிடிப்பு

மதுரை: சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன் தி. குன்னத்தூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கி.பி. 16ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த வளரி வீரன் கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது, “பழமையும் பெருமையும் வாய்ந்த இவ்வூர் பிற்காலப்பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் சிறு குன்றத்தூர் என்றும் காலப்போக்கில் குன்னத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூரின் தெற்கே தேவன்குறிச்சி மலைப்பகுதியை பெருங்குன்றத்தூர் என்றும் கலிங்கத்தரையர் பெயர் கொண்ட குறுநில மன்னர் ஆட்சி செய்ததாக கல்வெட்டு செய்தி சமீபத்தில் கண்டறியப்பட்டது மற்றொரு சிறப்பு.

நடுகல்:இவ்வூரில் கண்டறியப்பட்ட நடுகல் சுமார் 41 அங்குல உயரம் 27 அங்குல அகலம் கொண்டதாகும். மூன்று அடுக்கு கோபுரம், தோரணவாயில் வடிவில் கொண்டு கீழ்ப்பகுதியில் ஆண் மற்றும் இரண்டு பெண் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன.

இச்சிற்பம் வளரி வீரன் என்பதற்குச் சான்றாக நடுப்பகுதியில் வீரன் கையில் ஈட்டியையும் இடது கையில் வளரியையும் பிடித்தவாறும்; வலது கால் சற்று சாய்ந்து முழங்கால் தெரியும்படியும்; இறுகிய காலும் காலில் கழலும் கொண்டு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இச்சிற்ப வீரன் உருவம் விரிந்த மார்பும், கையில் காப்பு, நீண்ட காதும் தேய்ந்த முகத்துடன் காணப்படுகிறது. வளரி தன் கையில் ஏந்தி இருப்பதால், ’வளரி வீரன்’ சிற்பம் என்று அழைக்கப்படுகிறது. வீரனின் வலதுபுறத்தில் பெண் சிற்பம் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண் சிற்பம் வலது கையை தொடையில் வைத்தும்; இடது கையை செண்டு ஏந்தியும் காணப்படுகிறது. மற்றொரு பெண் சிற்பம் வீரனின் இடதுபுறத்தில் இடது கையை தொடையில் வைத்தும்; வலது கையை செண்டு உயர்த்தியும் உள்ளது. இரண்டு பெண் சிற்பமும் ஆடை அலங்காரத்துடன் கொண்டை சரிந்து காணப்படுகிறது.

இச்சிற்பத்தை பார்க்கும்போது ’வளரி வீரன்’ இறந்த பிறகு இருவரும் உடன்கட்டை ஏறியதற்கு சான்றாக அறியமுடிகிறது. தமிழ்நாட்டின் தென்பகுதியில் சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி பகுதியில் வளரி வீரன் சிற்பம் அதிகமாக காணப்பட்டாலும், மதுரை மாவட்டத்தைப்பொறுத்தமட்டில் உசிலம்பட்டி மற்றும் அதன் மேற்குப் பகுதியில் கண்டறியப்பட்டு வருகிறது.

தற்போது மதுரையின் தெற்குப்பகுதியில் வளரி வீரன் சிற்பம் இருப்பது கூடுதல் சிறப்பு. வளரி ஆயுதம் தமிழ்நாட்டில் தெற்குப்பகுதியில் பரந்து காணப்படுகிறது என்பதற்கு இச்சிற்பம் மற்றொரு சான்று.

தொல்லியல் ஆய்வாளர் உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் அளித்த பேட்டி

வளரி: பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய ஒரு வகை ஆயுதம் தான், வளரி. குறிப்பாக கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களை பிடிப்பதற்கு, போர்க்களத்தில் பயந்து ஓடி தப்பித்து செல்பவர்களை உயிருடன் பிடிப்பதற்கு வளரியைப் பயன்படுத்தினார்கள்.

வளரியை கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி வீசும்போது அவர்கள் பிடிபடுவார்கள். வளரியை வளைதடி, திகிரி, பாறாவளை, சுழல்படை, கள்ளர்தடி, படை வட்டம் என அழைத்தனர்”, என்றார்.

இதையும் படிங்க:ரூ.20 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் பறிமுதல்...

ABOUT THE AUTHOR

...view details