கன்னியாகுமரி மாவட்டம் கீழையூரை சேர்ந்த டெலஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், " அரபிக்கடல் கரையிலுள்ள இரவிபுத்தன்துறை பகுதியில் 450 மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா காரணமாக ஏப்ரல் மாதம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டதால், அருகில் உள்ள எட்டு கிராம மீனவர்கள் இரவிபுத்தன்துறையில் வந்து பெரிய படகுகளை நிறுத்தி வருகின்றனர்.
மேலும், இங்கு மீன்கள் வாங்க வரும் வியாபாரிகளும் கடற்கரைக்கு செல்லும் குறுகிய சாலையில் கனரக வாகனங்களுடன் வந்து செல்வதால் வீடுகள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய படகுகள் நிறுத்துவதற்காக கடலை சிலர் ஆழப்படுத்தும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால் அச்சத்தின் பிடியிலேயே வீடுகளுடன் மக்கள் இருந்து வருகின்றனர். எனவே இரவிபுத்தன்துறை கடல் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவும், கனரக வாகனங்கள் வருவதை தடை செய்யவும் உத்தரவிட வேண்டும் “ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.