கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மூன்று மீனவர்கள் அக்டோபர் 18ஆம் தேதியன்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கைக் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதால் மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது.
இதையடுத்து, அவர்களை மீட்டுத் தருமாறு முதலமைச்சர் ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். மூன்று மீனவர்களில் சுகந்தன் (22), சேவியர் (38) ஆகிய இருவர் இலங்கைக் கடற்படை வசம் இருந்தனர். மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (28) என்பவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, உயிரிழந்த ராஜ்கிரண் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குத் தளத்திலிருந்து ராஜ்கிரண் (28), சுகந்தன் (22), சேவியர் (38) ஆகிய மூவரும் ஒரு படகில் நடுக்கடலில் அக்டோபர் 19ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன், சேவியர் ஆகிய இருவரை இலங்கைக் கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாள்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.